தொகுப்பு

Archive for the ‘இலங்கைத் தமிழர்கள்’ Category

பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’

தாத்தா முதல் டாடா வரை ‘கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் ‘கொலவெறி’ தான்!

இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் … சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள்  இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் ‘கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள்.

‘என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 2.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள்.

4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. யாழ் நகரத்தின் வரவேற்பு வளைவு, நல்லூர் முருகன் கோயில், மரியாள் பேராலயம், யாழ்ப்பாணத்தின் மையத்தில் உள்ள தமிழ்ப் பெரியவர்களின் சிலைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, தாய் மண்ணைத் தரிசிக்க முடியாத புலம்பெயர் தமிழர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எஸ்.ஜெ.ஸ்டாலினிடம் பேசினோம்.

பாடல்…

”இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டிலேயே  ஸ்டுடியோ வைத்து, குறும்படங்கள், நாடகங்கள், வானொலி நிகழ்வுகளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து இசை அமைக்கிறோம். ‘தனுஷ்’ பாடல் மெட்டில், பலரும் பலவிதமாக பாடல்களை உருவாக்கி இணைய தளங்களில் வெளியிட்டதைப் பார்த்தோம். என்னுடைய நீண்டகால ஆதங்கத்தை கலந்து நாங்களும் ஒரு பாடல் செய்தோம். இந்தப் பாடல் காட்சிக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்புகளை என் நண்பர்கள் வர்ணன், அமலன் ஆகியோர் செய்தார்கள். ‘கொலவெறி – யாழ்ப்பாணம் வெர்ஷன்’ என்று பெயரிட்டு, ஈழத்தமிழர் பார்வையிடும் சமூக இணையதளங்களில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியிட்டோம். நீண்டகாலமாகவே தமிழ்க் கலைப் படைப்புகளில் தமிழ்மொழிக் கொலையும் வேற்றுமொழிக் கலப்பும் நீடிப்பது கண்டு மனதில் பெரும் ஆதங்கம் இருந்துவந்தது. வேற்றுமொழிக் கலப்புடன் வரும் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் தனித் தமிழில் மட்டுமே இயற்றப்படும் பாடல்களுக்கும் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை இந்தப் பாடலுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பின் மூலம் அறியமுடிகிறது” என்றார்.

தமிழுக்கு மரியாதை!

- ஜூனியர் விகடன்-

தமிழ்நாட்டில் உள்ள நாளிதழ்கள் ,சஞ்சிகைகள்,இணையதளங்கள் அனைத்தும் இப்பாடலை பாராட்டி எழுதியுள்ளன.இலங்கையின் அனைத்து தொலைக்காட்சி,வானொலிகளிலும் இப்பாடல் ஓயாது ஒளி,ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கின்றன.புலம் பெயர் நாடுகளும் இப்பாடல் பட்டயக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றது.

தொடர்புடைய சுட்டிகள் :

http://news.vikatan.com/index.php?nid=5972

http://www.vikatan.com/article.php?aid=14784&sid=415&mid=2&

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%27&artid=535458&SectionID=131&MainSectionID=131&SectionName=World&SEO=

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும்  பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான  சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

நோர்வே உள்ளூராட்சித் தேர்தல்களில் 11 இலங்கைத் தமிழர்கள் தெரிவு!

நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வெவ்வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிற்கட்சி சார்பில் ஓஸ்லோ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணம் தெரிவாகியுள்ளார்.

ஒஸ்லோ தொகுதியின் குறூறூட் உள்ளூராட்சி அவைக்குப் போட்டியிட்ட, சோசலிச இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த புலேந்திரன் கனகரட்ணம், அதே தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிஸ்கந்தராஜா தர்மலிங்கம் – ஸ்தொவ்னர் உள்ளூராட்சி அவைக்கு தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, ரம்யா ஆறுமுகம் ஆகியோர் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர்.

ஒஸ்லோவிற்கு அண்மையில் அமைந்துள்ய லோறன்ஸ்கூ நகரசபை வேட்பாளராக தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட திலகவதி சண்முகநாதன் தெரிவாகியுள்ளார்.

றோகலாண்ட் மாவட்ட அவைத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஜேசுதாசன் அலோசியஸ், பேர்கன் நகரசபை வேட்பாளர்களாக வலதுசாரிக்கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தூர்வாசன் சிங்காரவேல், சோசலிச இடதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட குபேரன் துரைராஜா மற்றும் ஓலசுண்ட் நகரசபைக்கு வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீபன் புஸ்பராஜா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

இவர்களில் ஹம்சாயினி குணரட்ணம், புலேந்திரன் கனகரட்ணம், சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, திலகவதி சண்முகநாதன் ஆகியோர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாக முதன்முறை தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறைத் தேர்தலில் இரண்டாவது தடவையாக இந்த ஐவரும் மீள்தெரிவாகியுள்ளனர்.

முதன்முறையாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பெருமளவில் விருப்புவாக்குகள் அளித்தமை முக்கிய காரணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடாத்தப்படுகின்றன.

இறுதியாக செப்ரெம்பர் மாதம் 2009ம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2005 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக்கட்சி மற்றும் மத்திய கட்சி ஆகியன இணைந்த இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2007ம் ஆண்டு நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. நோர்வேயில் 434 மாநகர சபைகளும் அவற்றின் கீழ் உள்ளூராட்சி சபைகளும் உள்ளன.

இன்னொரு வகையில் சொல்வதென்றால் 2 ஆண்டுகளுக்கொரு முறை நோர்வே மக்கள் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர் எனலாம்.

சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழனுக்கு மாபெரும் வெற்றி!

சுவிற்சர்லாந்தின் லவுசான் மாநகர சபைத் தேர்தலில் அமோக வெற்றி ஈட்டிய இலங்கைத் தமிழர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்டவர்.

அண்மையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 100 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் நமசிவாயம் 18 ஆவது இடத்தில் உள்ளார்.

வெற்றி பெற்ற அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கின்றமைக்காக அரச மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு மாநில ஆளுனர் சில்வியான் கிளையன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

லவுசான் மாநகர சபை உறுப்பினராக நமசிவாயம் இரண்டாவது தடவையாக தெரிவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்

யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது. இப் பட்டத்தினை பெறும் முதல் ஈழத்தமிழன் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப்பட்டம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை கீழே காணலாம்.

இந்தப் படங்களை தந்து உதவிய S.நிருஜன் அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

ஈழத் தமிழருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது

ஈழத் தமிழருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது

யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” என்னும் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது. இப் பட்டத்தினை பெறும் முதல் ஈழத்தமிழன் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில் திரு. வேலுப்பிள்ளை மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார்.

சட்டத்தரணியான அவர் பாரிஸில் சர்வதேசப் பொருளாதார உறவுகள் என்னும் துறையில் பட்டப்பின் கற்கைநெறியில் தகைமை பெற்றார்.

இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும், இந்தியாவில் முதலீடு செய்யவும் விழைந்த பிரெஞ்சுக் கம்பெனிகளுக்கு அவர் சர்வதேச வர்த்தக நெறிகளுக்கு அமைய சட்டஆலோசனைகளை வழங்கினார்.

பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான அவர் பிரெஞ்சு அரசாங்கத்துக்காக பல நூல்களை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார்.

நானூற்று பன்னிரெண்டு பக்கங்கள் கொண்ட, இந்தியாவில் முதலீடு செய்தல் தொடர்பான அவரது நூல் பிரெஞ்சுக் கம்பெனிகள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி-இறக்குமதி என்னும் விடயங்கள் பற்றிய பிரெஞ்சுமொழி நூல்களுள், இந்த நூல் கணிணிவழி விற்பனை நிறுவனமான ‘அமேசன்’ நிறுவனத்தின் சிறந்த விற்பனைப் பட்டியலில் நீண்டகாலம் தொடர்ச்சியாக முதல் நூறு இடங்களுள் ஓர் இடத்தைப் பெற்று வந்துள்ளது.

2007ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல் 2010ஆம் ஆண்டில் மாற்றீடு செய்யப்பட்ட பின்னரும், புதிய நூலுடன் இந்த நூலும் முதல் நூறு இடங்களுள் இன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்தல், வர்த்தகம் செய்தல் என்னும் விடயங்கள் தொடர்பில் அவர் பாரிஸில் பல கலந்துரையாடல்களிலும், கூட்டங்களிலும் பங்குபற்றி பிரெஞ்சுமொழியில் உரைகள் நிகழ்த்தியுள்ளார்.

அவரது இச்சேவைகளைப் பாராட்டும் முகமாக பிரெஞ்சு அரசாங்கம் ‘செவாலியர்’ என்னும் விருதை அவருக்கு வழங்கவுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் கொழும்பில் ஜூன் மாதம் 27ஆந் தேதி மாலை நடைபெறவுள்ளது.

தாய்மொழியான தமிழுடன், திரு. வேலுப்பிள்ளை ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி என்னும் மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராவார்.

திரு. வேலுப்பிள்ளை பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. வே.நாகநாதன், திருமதி. ஈஸ்வரி நாகநாதன் அவர்களின் புதல்வர் ஆவார்.

காலஞ்சென்ற திரு. நாகநாதன் பருத்தித்துறை நகர சபையின் துணை முதல்வராக இருந்தவர் என்பதும், நாகர்கோவிலில் பாடசாலை ஒன்றை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் ஞானக்குமரனின் சகோதரரும் ஆவார்.

——————————————————————————–
குறிப்பு: ஈழத் தமிழன் என்ற பதமும் இலங்கைத் தமிழன் என்ற பதமும் இலங்கையின் வட கிழக்கில் வாழும் தமிழர்களை குறிக்க பயன்படுத்தும் சொற்களாகும்.இரண்டு சொற்களும் ஒன்றாகும். இலங்கைத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்றும் அழைக்கலாம்.ஈழத் தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என்றும் அழைக்கலாம்.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற பிரிவுக்குள் அடங்குவதுமில்லை,இலங்கைத் தமிழர்கள் என்றும் அழைக்கப்படுவதுமில்லை. அவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இங்கிலாந்தில் சாதனை புரிந்த இலங்கைத் தமிழர்

 

யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன், The Real Time Location System என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஈழத்தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சாதனைக்காக UK ICT Pioneers விருது, Royal Academy of Engineering ERA Foundation Entrepreneurship ஆகிய இரு உயரிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பான radio real time tagging system, பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர் லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

இவரது கண்டுபிடிப்பான intelligent wirless passive sensor technology system விமான நிலையங்களில் பாதுகாப்பு சேவைகளுக்கு மிகவும் உபயோகமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது.

சிதம்பரநாதன் சபேசன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

தொடர்புடைய செய்திகள்.

 

ஹொலிவூட்டுக்குள் காலடி எடுத்து வைத்த இலங்கைத் தமிழர்!

இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் பெயர் ஏ கொமன் மான்.

ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது. இப்படம் இலங்கை மற்றும் ஹொலிவூட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது.

படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார். ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில் படப் பிடிப்பு பூர்த்தியாகி உள்ளது.

இவரது இயக்கம் மற்றும் இவரது திறமையை ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன் ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற முதல் தமிழர் என்கிற பெருமையையும் இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார்.

இந்த செய்திக்கு வட இந்திய ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளன. அத்துடன் சீன ஊடகங்களும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்.

http://articles.timesofindia.indiatimes.com/2011-05-31/news-interviews/29603829_1_chandran-rutnam-ben-kingsley-sri-lankan

 

கனடாவில் சிறந்த தொகுதித் தலைவரிற்கான விருதைப் பெற்ற இலங்கைத் தமிழர்

கனடாவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒன்ராறியோ மாகாணத்திற்கான பழமைசார் கட்சியின் மாநாட்டில் சிறந்த கட்சித் தொகுதிக்கான தலைவர் என்ற விருதை ஈழத் தமிழர் ஒருவர் பெற்றுள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்திற்கான மேற்படி கட்சியின் சிறப்பு மாநாட்டில் மேற்படி மாகாணத்தில் உள்ள 103 தொகுதிகளிற்குள்ளும் சிறந்த தொகுதித் தலைவர் என்ற விருதினை ஈழத்தமிழரான ஹரி ஜெகநாதன் பெற்று தென்னாசியச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தென்னாசியர்களிடைய இவ்விருதை முதலில் பெறும் ஒருவராக உள்ள ஹரி ஜெகநாதன் அவர்கள் கனடியப் பழைமைவாதத் கட்சிசார் தமிழ் அமைப்பின் பிரதானிகளில் ஒருவராகவும், மேற்படி கட்சியில் சுமார் இரண்டு தசாப்தங்களாக இருந்து வருபவரும் ஆவார்.

ஓன்றாரியோ மாகாணத்தில் முக்கிய சமூகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் தமிழ்த் சமூகத்தின் திறமைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் நேர்மையான வகையில் நிலைநிறுத்தும் வகையில் செயலாற்றி வரும் கனடியத் தமிழ் பழைமைசார் அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான ஹரி ஜெகநாதன் ஈழத்தமிழர்கள் சார்பாக செயலாற்றி வரும் ஒருவருமாவார்.

இலங்கைத் தமிழரொருவர் ஜொ்மனியில் அமைச்சராக நியமனம்

இலங்கைத் தமிழர்கள் அரசியலில் பாரிய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆம்,யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக (அமைச்சராக ) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளார்.

பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார்.1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார்.

அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்துள்ளது.

ஜொ்மனியில் அமைச்சர் நிலைக்கு உயர்ந்து  ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சோ்த்துள்ள கிருகரன் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் அரை இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வசிப்பது  குறிப்பிடத்தக்கது.

 

ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு இந்திய சிறப்பு விருது

58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு, தென்னிந்திய திரைப்பட உலகுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளதை அறிந்திருப்பீர்கள்.
அதில் ஈழக் கவிஞரும்,சிறந்த எழுத்தாளருமான வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. இவர் ஆடுகளம் படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார்.மொத்தமாக ஆடுகளம் 6 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.அந்த படத்தில் நடித்ததற்காகவே இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவில்  பிறந்த வ.ஐ.ச. ஜெயபாலன் மிகச் சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இன்னும் சொல்லப் போனால் இலங்கையின் முன்னோடி எழுத்தாளர் என்று சொல்லலாம்.சிறிது காலத்திற்கு முன்பு இந்தியாவிற்கு சென்ற அவர் தொடர்ச்சியாக கவிதைகளும் கட்டுரைகளையும் எழுதி வந்ததை அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் முதன்மை தமிழ் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் இவரது  நேர் காணல்கள் பலவற்றை பார்த்திருப்பீர்கள்.

அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய  நேர்காணல் ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன்.

இதற்கு முன் நடித்த அனுபவம் உண்டா?
”நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். ‘மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். ‘அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார்.

ஜிம்மில் கொண்டுபோய் விட்டு, ‘பேட்டைக்காரன்’ பாத்திரம் எப்படி நடக்கணுமோ அதுபோல நடக்கப் பழக்கினார். ‘பிராக்டிக்கலா விளக்குறதுக்கு முன்னால் நடிப்புன்னா என்னன்னு எனக்கு தியரிட்டிக்கலா சொல்லுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு வாரம் வகுப்பு எடுத்தார். உரைநடையில் எழுதுவதை உடல்மொழியில் கொண்டுவர்றதுதான் நடிப்புங் குறது புரிஞ்சுது. அதுக்குப் பிறகு நடிக்கிறது கஷ்டமா இல்லை.

எனக்கு ஒரே இடத்தில் இருந்து பழக்கம் இல்லை. ஆனால், இந்தப் படத்துக்காகத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தேன். என் மனைவி வாசுகிதான் எனக்கு ஸ்பான்சர் செய்து தமிழ்நாட்டில் தங்கவைத்தாள். ஊர் ஊராக சுற்றித் திரிந்ததால் நாவலோ, கதைகளோ எழுத முடியவில்லை. கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரண்டு வருடங்கள் ஒரே ஊரில் இருந்ததால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது’ என்ற குறுநாவலை எழுதிவிட்டேன்!”

“இலங்கையில் சேவல் சண்டை எல்லாம் உண்டா?”

”ஒரு காலத்தில் நடந்ததா கேள்விப்பட்டு இருக்கேன். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு என் சொந்த ஊர். சின்ன வயசில் இருந்து, மனிதர்களுக்கு இடையிலான சண்டைகளைத்தான் நேருக்கு நேரா பார்த்து வளர்ந்தேன்.

”படத்தில் உங்களுக்கு ராதாரவிதான் டப்பிங் பேசி இருக்கார். இருந்தாலும், படப்பிடிப்பில் மதுரை வட்டார வழக்கைப் பேசி நடிப்பது சுலபமாக இருந்ததா?”

”சிங்களப் பெண் பூஜா தமிழ் சினிமாவில் வந்து தமிழ் பேசி நடிக்கும்போது, தமிழனான எனக்கு என்ன மொழிப் பிரச்னை? தவிரவும், ஈழத் தமிழர்களான எங்களுக்கு சினிமா, தொலைக்காட்சி வழியாக தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்கும் பல காலமாகப் பழக்கமான ஒன்றுதான். இந்தியத் தமிழர்களுக்குத்தான் ஈழத் தமிழ் விளங்குவது இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்குகளையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆடுகளத்தில் நான்தான் டப்பிங் பேச விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. டப்பிங் பேசிய ராதாரவியே, ‘நீங்கள் பேசி இருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று சொன்னார். அவரே ஏற்பாடு செய்து, நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்து இருக்கிறார். என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!”

Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers