ஐ.சி.சி.யிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாக்கீது

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை ஐ.சி.சி. தங்களிடமிருந்து பறித்தது சட்ட விரோதமானது என்றும், பாரபட்சமான முடிவு என்றும் குற்றம்சாட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐ.சி.சி.யிற்கு சட்ட ரீதியான தாக்கீது அனுப்பியுள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐ.சி.சி. வாரியக் குழு கூட்டத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற வாய்ப்பளிக்காமல், நிகழ்ச்சித் திட்டத்தில் இல்லாத இந்த முடிவை தன்னிச்சையாக ஐ.சி.சி. எடுத்துள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது என்று தங்களுக்கு தெரியப்படுத்தாமல் பாகிஸ்தானை நீக்கியது சட்டவிரோத மற்றும் பாரபட்சமான நடவடிக்கையாகும். உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் மற்ற நாடுகளான இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு சூழ் நிலைகள் குறித்து முறையாக ஆய்வு நடத்தாமல் ஐ.சி.சி. இந்த முடிவு எடுத்துள்ளதால் சட்ட ரீதியாக தாக்கீது அனுப்பியுள்ளோம் என்று இஜாஸ் பட் கூறினார்.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ள இந்த சட்டத் தாக்கீது ஐ.சி.சி. தகராறுகள் தீர்ப்பு ஆணையத்தின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது பற்றிய முடிவு வரும் ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்டுப் போதுக்கூட்டத்தில் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடுகைக்கு பதிலிடவும்